Posts

Showing posts from November, 2021

மலை உடஞ்சி மண்ணா போச்சு

மலையில் விடுபட்டு  பாறையாய் பிறப்புற்று விரிசலில்  உடைபட்டு மழையில் அரிப்புற்று அருவியோடு விழுந்து ஆற்றோடு கலந்து  கடலோடும் பொழுது கரை ஓரம் படர்ந்து கதிரொளியில் காய்ந்து காற்றுத் துகளாகி அந்தரத்தில் பயணித்து மெல்ல நகர்ந்து  புயலில் புலம் பெயர்ந்து  நிலத்தை குடியாக்கி குடியை குழியாக்கி நீரை நீ தேக்கி செடி வளர  வளம் சேர்த்து மனித பிறப்புக்கு மானமும் பசியும்  மரத்தால் மறைய விளை நிலத்தின் மூலாதாரமாய்  மனிதன் காலுக்கடியில் கிடந்து இத்தனையும் தாங்கி எல்லோரின் வசைபாடலுக்கும் மண்ணு எனும் வார்த்தைவழி  வாழ்வாங்கு வாழ்கின்றாய்

நானும் இறைவனே

சொல்ல முடியாததை சொல்லி பார்க்கிறேன்  சொந்தத்தில் தான் சொர்க்கம் உள்ளதென்று. இழக்க முடியாததை இழந்து பார்க்கிறேன்  நினைவே நீயும் நீங்கிடுயென்று. பிரிய விரும்பாததால் பிரிந்து பார்க்கிறேன்  பிரியமுள்ள நட்பிடமிருந்து. வாழ விரும்பாமலே வாழ்ந்து வருகிறேன் ரசிப்பதற்கும் கோடி நிகழ்வுகள் இருப்பதையுணர்ந்து. அறிய விரும்பாமல் உணர்ந்து அறிகிறேன் காமம் கூட காமுகன் மருந்தென. காதலில்லாமல் பலரையும் காதலிக்கிறேன்  என்துணை அவளாயிருக்க வேண்டுமென. கடக்க முடியாமல் கடந்து போகிறேன் கடந்த காலத்தின் எதிர்காலம் நிகழ்காலம் என்றுணர்ந்தததால்.  ஆசை அனைத்தும் நிறைவேறாதென தெரிந்தும் ஆசைபடுகிறேன் சிலவேனும் நடந்திடு மென்பதால். எழுத தெரியாமல் எழுத தொடங்கினேன்  இவை கவி விடிவாகும் என்று.  பேச தெரியாமல் பேச தொடங்கினேன் நானும் ஒர் பேச்சாளனின்று. இருக்கும் இறைவனை காண முடியாததால் முடிக்கிறேன் இப்படி இயற்கையும், இறைஉருவும், நானும் இறைவனென்று ஆண்டவனி(ளி)ன் பிள்ளையாய்.

காலனை விடவும் காலநிலை

சாலையோரம் கடை போட்டு - கூவுவாங்க காய்கறிகள எடை போட்டு. அடுக்கி கெடக்கும் சோத்துதட்டு, அழகா ஆவி பறக்கும் இட்லி தட்டு. பலூன், பஞ்சுமிட்டாய், பொம்ம கடைய சுத்தி வரும் குழந்தைங்க அசட்டு.  முழம் பத்து வித்துடத்தான், ஊரெல்லாம் வலம் வருவான். அளவெடுத்து அடுக்கி இருக்கும் - செருப்பாகி  நடைபோட துணை இருக்கும்.  வளையல், ஊசி பாசி மணி இருக்கும், அது வளைச்சு நம்மை போட்டிருக்கும். ரகரகமா பிரிச்சு வச்ச, விதவிதமா துணி இருக்கும், இத்தனைக்கும் மேல அந்த - ரோட்டு கடைக்குனு ஒரு சிறப்பிருக்கும். சிரமப்பட்டு சேத்துடுவான்  அஞ்சு பத்து பாத்துடுவான் பேரம் பேசும் மக்களுக்கும் அன்பு ,பாசங் கருணை காட்டிடுவான்.  கடனில் கடைய போட்டுடுவான் - கடங்காரன போல்  காவல் காரனுக்கும் மாமூல் கொடுத்திடுவான். இத்தன தொல்லயும் தாண்டி வந்தா பெருந்தொல்லை தருதடா  காலனை விடவும் காலநிலை.