Posts

Showing posts from April, 2020

நானும் என் புத்தகமும்

தொட்டு படித்தால் கொட்டி கொடுக்கும்  அறிவும் இதனை அள்ளிப் பருகும்  தெளிவை கொடுத்தால் சிந்தை சிறக்கும்  தெரியா ததற்கும் விளக்கமளிக்கும்.  எழுத் தறிவித்தல் இறைவனாகும்  எடுத் துறைக்கும் புத்தகம், புத் தகமூட்டும் கேடு செய்பவன் ஏடு தொட்டால் நாட்டில் நல்லறம் நிலைத்தே நிற்கும்.  புத்தகம் வெற்றுப் பக்கங்களல்ல புத்தியின் யுத்தச் சித்தங்களே வித்தகர் விரல்களால் விதி செய்ய மத்தவர் அறிந்திட உரைத்திடும் புத்தகமே.  பக்கம் புரள்வதில் புதிர்கள் இருந்தாலும் படிப்பவன் சதிரை சிதறி யடித்துவிடும் தான் கற்றது கை மண் அளவே ஆனாலும்  எடுத்துரைத்தால் அறியா மையெனும் இருளகலும்.  அறத்தின் விரிவே அறிவாகி அதை அறவே அறியப் புத்தகம் துணையாகும் உரியப் புத்தகம் தேடி படித்தாலே வாழ்க்கை உந்தன் வசமாகும். 

கொடிய கொரோனா

அன்பு அழிந்திடுமோ மனிதம் மடிந்திடுமோ உழைப்பு உடைந்திடுமோ கனவு கலைந்திடுமோ குடும்பம் குலைந்திடுமோ கல்வி கரைந்திடுமோ காலம் கழிந்திடுமோ ஞாலம் பிழைத்திடுமோ கவலை வந்து நமை  வாட்டி வதைத்திடுமோ கூலி வேலையும்  கேலி செய்திடுமோ வாழ வழியுமின்றி  வலிகள் பெருகிடுமோ தேடல் என்பது தேங்கி கிடக்கையில் நடக்க இடமுமில்லை  முடங்கி முடியவில்லை காலங் காத்திருந்து மரமாய் மலர்ந்துவிடு ஏற்ற தாழ்வுமில்லை ஏக்கம் தேவையில்லை  தாக்கம் என்பதை தூக்கி எரிகையில் வாழ்வை சீரழிக்க வந்த கொரானா  ஊக்கம்  உள்ளவரை நோக்கம் வெல்லும் வரை  நின்று பார்ப்பானா கொடிய கொரானா. 

காலை

கதிர்கள் எழவில்லை  இருளும் இங்கில்லை இரவின் பிரிவாலே விடியல் விடை சொல்லுதே.  வளியும் வலியின்றி  வயல்வெளியில் விளையாட வியர்வை வடிந்தோடும் அழகு காலை இதே.  பகலவன் படுக்கைதனில் மதியுறங்க பார்க்கையிலே சூரியக் கதிர் சூட்டில்  சுவடுகளும் மறைகிறதே.  ஊமையன் பேச்சை போல் ஊர் பேச்சும் மெல்லெழவே  ஊர் சுற்றும் சூரியனும் கண் விழிப்பான் கதிர் தந்தே. குளுமையான காற்றும் பறவைகளின் பாட்டும் குதூகலம்  ஊட்டும் இது இனிய காலைப் பொழுதின் இன்பத் தேரோட்டம். 

வான் சிரிப்பு

வானின்,  எல்லை கானல் நீரும்  அதனுள் பார்க்கப் பல நூறும் வரையறை இல்லா வானில் வழியடைத்து மேகம் மெல்ல ஊரும் .  நாமும் விண்ணில் வாழ்கிறோம் புவி ஈர்ப்பால்  தரையை ஒட்டி தாழ்கிறோம் ஆயிரம் கண்ணுடைய வானம் அதன் பார்வையில் புள்ளியாம் நீயும் நானும்.  சிதறிய நிலத் துண்டுகளாம் வேற்றுமையே இதன் வேண்டுதலாம் சுதந்திர வானும் காணும் வேடிக்கையாம் இதில் நடக்கும் அரசாட்சியே பெரும் கேளிக்கையாம்.  என்றும் ஏளனத்துடனே  சிரிக்கிறது நிலவும் ஏற்ற தாழ்வுகள் தாங்காமல் தானும் மழையாய் கண்ணீர் வடிக்கிறது மானுடத்திற்கு மாபெரும் அறிவுரை அளிக்கிறது. 

அம்மா

வருவானோ/ளோ மாட்டானோ/ளோ என்றெண்ணி வாடிடுவாள் வந்தவுடன் வசைபாடி  அன்பினால் அதட்டிடுவாள்.  இரு கை கொண்டு அணைத்திடுவாள் மன இருக்கையில் நமை அமர்த்திடுவாள் மனக்குறை பல இருந்தாலும்  மலர் மல்லிகையென மலர்ந்திடுவாள்.  கரு சுமப்பதை சுகமென்பாள் பளு சுமக்கையில் கை வலியென்பாள் மகள் செல்வது மறுவீடென்பாள் மறு கணத்தே மன வலி கொள்வாள்.  தன் கடைசி காலங்களில்  கை விடுவான்/ள் என் றறிந்தாலும் கை கொடுத்தே உதவிடுவாள்  தன் கை ரேகை தேயும் வரை.  ரேகை அழிந்திடினும் வாகை சூடிடினும் ஆயுள் பொய் யுரைப்பதில்லை அது அன்னை தந்ததென. 

மனிதம் ம(மு)டிந்தது

பிணத்தின் இடச்சுடு காடது தவிக்குது மனித மனத்தின் பேரிடர் பாட்டினால்.  மனம் மருந்தை தேடியோடுது மதி மறந்தே மனிதமும் சிதைந்து சின்னா பின்னமாகுது.  சாவை தேடி திரியும் உயிர் சவச்சடல ஆறடி படுகுழியினிலும் இடராய் மலர்ந்தது சுயநல மென்னும் பயிர்.  தொட்டே தானும் கெட்டுவிட்டான் மனிதமற்ற மனிதர்களுக்கும் மருந்தால்  மாற்றுயிர் தந்துவிட்டான்.  கை விட்டனர் அவர்  தந்த உயிர் கொண்டு கை கொடுத்தவன் கதியிது என்றிட இனி வரும் வரலாற்றிலும் இடமுண்டு.  மழைக்காகவே மேகம் காரிருளடைகிறது அத்தனை கரியம் எழுவதுகண்டு மனதின் பாதை மரணவாயிலை தொடுகிறது.