Posts

Showing posts from March, 2024

கருவெண்மை (black and white)

வண்ணமில்லா காலம் அழகை அறியவியலா மாந்தர்கள்! அழகு காலை எது ? அந்தி மாலை எது ? நிறங்கள் பிரசவிக்கவில்லையோ ! சாம்பல் வண்ண சான்றுகளாய்  காட்சி தரும் படங்களினை! கண்களில் பூட்டி வைத்து  காலத்தை பின்சுழற்ற கற்பனையில் காவியமாய்! எங்கெங்கு பார்த்தாலும் கருவெண்மை ஓவிய காட்சி  மனமோ செய்கிறது எண்ணங்களால் வண்ணங்களில் ஆராய்ச்சி !! பகலவனும் பகலற்ற பொழுதுகளில்  பகலவனிடம் கதிர் திருடி எதிரொளித்திடும் மதி மாலை என எல்லாமும் கரு வெண்மை நிறமாக வடிவுள்ள வானவில்லுக்கு கடந்த கால காட்சிகளில் அழகூட்டும் வண்ணமே  முகவரிக்காய் கருவெண்மையின் கருவுக்குள்  மரகத பச்சையுடன்,  மாணிக்க, மஞ்சள், நீலமாம், இளங் கதிரொளியென எல்லாமும் அதனூடே இளைப்பாற குடிபுகுந் திருக்குமோ! இப்படிக்கு வண்ண நிழற்படங்கள் கூறும் கருவெண்மையின் கருச் சுமை.

இருள் தேர் இழுப்போம்

இருள் வரும் போதெல்லாம் எனக்கான உலகம் பிறக்கிறது காரிருளுள் தான் எனக்கான பேரருள் கிடைக்கிறது  நாளெல்லாம் இசை கேட்கிறேன் இரவோடு இசை தரும் இனிமை நிழலோடு விளையாடும் பிள்ளை ன் களிப்புக்கான உழைப்பின் மகிழ்வு இருளில் தொடங்கும் தொடரிப் பயணமும் எதிரில் மோதும் போர் காற்றும் இசையாகி செய்யும் இம்சைகளோடு மெல்லிசை கேட்கும் போதெல்லாம் மனமும் மேன்மை அடைகிறது  தினமும் இதற்காய் அலைய தவிக்கிறது. இருளில் இருக்கும் சுகந்தத்திற்காய் பகலில் பாராருடன் பல போராட்டத்துடன்  நாளை நகர்த்திச் செல்வது  இருளெனும் தேரை இழுக்கவும் ரசிக்கவுமே.

மாய உலகம்

தனித்து வாழ விரும்பும் நானே  குடும்பங்களை பார்த்ததும் குதூகளிக்கிறேன் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்கிறேன் இச்சை கொள்கையில் இளித்து சிரிக்கிறேன் நான் பேருக்கு மனிதன்  ஆனால் யாருக்கு கடவுள் இணைப்பது காதல்  முடிப்பது மணம் இனம் பெருக காமம் அதில் நான்  கருமுட்டையின் உரு விந்து நீரால் வந்த வசித்திரம் மனம் அருந்தால் மனிதம் மனமுருகக் கடவுள்  ஏனிந்த பிறப்பு ? வாழ ஆசை இல்லாதவனுக்கு  ஏன் வாழை இலையில் வகைவகை உணவோ ஏதோவென்று எடுத்து ருசித்தால் எல்லாம் வேண்டும் என்றிடும் ஆசை வேண்டவுமில்லை வெறுக்கவுமில்லை முடிந்தால் போதும் இப்பிறப்பின் எல்லை.

உவகை

உவகை நிறைந்த உலகம் உலகில் உயிர்கள் உலவி பறக்கும் பறக்க துடிக்க எண்ணும் மனமே  மனமகிழ்வைத் தேடி திரியும் மணக்கும் மல்லிகை இருக்கும் இருந்தும் மணக்க மறக்கும் மறந்து போகும் மனித மனங்கள்  மனமலைந்து அழிந்து போகும் நிராகரித்து நம்மை நிதானபடுத்த நிதானமற்ற மனிதர்களின் வார்த்தை வார்த்தை குறைத்து மனதில் மனவலிமை ஊட்டிச் செல்லும் வலிகள் வர வழியும் நீர் விழியில் விழியும் விரித்து களிக்கும் ஒரு நொடியில்  நொடி தான் நொடிக்கும் நொடிக்குள் மனமது மறக்கும் மறந்து எல்லாம் வல்லவனை நினைக்கையிலே.