Posts

Showing posts from June, 2024

சாளரம்

சாரல் வரும் வேளைகளில் சாளரத்து கம்பிகளில்  கண்ணத்தை வைத்தவுடன் கண் குறுகி பூரித்து விழித்திடும் குளிரால் உளங்குதூகளித்திடும்  கொட்டும் மழையை விடச் சொட்டாய் உதிர்ந்து கம்பிகளில் தொங்கும்  வடி நீர்த்துளி வரிசைகளை விரலாலே தடவி பக்கத்தார் உருவத்தில் பட்டென தெளித்து இப்படியே மாறி மாறி மாரியில் மகிழ்ந்திடுவோம் தாழிட்ட கதவுகளை  வெளி ஆள் யாரோ  தாளமிட்டுத் தட்ட யாரென குரலெழுப்பி சந்தேக பதட்டங்களை  விழி சன்னல் வழி காண தலை மட்டுங் காட்டி காதலே கேட்க கண்ட கண்ட சண்டைகளை  கண் மட்டும் பார்க்க தக்தொரு வடிவமைப்பே சாளரமாக்கிய ஆசாரி அவர் படைப்பே.

முடியிலல்ல முடிவில்

குழலற்ற தலையை கொஞ்சி குலவி தீண்டும் தென்றல் இதமாய் குளுமை தந்திடுதே மயிர் கோதிய விரல்களெல்லாம் தலை தடவும் பொழுதுகளில் முட்களென உணருகிறேன் மயிர் கால்கள் முளைப்பினிலே உயிரோடு இருக்கும் வரை உயரழகு என்பதெல்லாம் உயரத்தில் முடியாய் முளைக்கிறது உயர் முடிவெடுக்க முன்னோடி ஆகிறது அழகு முடியினில் மட்டுமல்ல முடிவுகளை நல்வழி முடிப்பதிலும் தான்.

இறப்பின் வெற்றி

கவலை கொள்ள தேவை அல்ல இழப்பு பெரிதல்ல  இருக்கும் பொழுது இருப்பை மறந்து அலைந்து திரிந்து இழந்த பிறகு நினைத்து தவித்து  மனம் வாட இல்லை அவரினி அன்புடன் நம்முடன் உறவாட இல்லாத போது  பொல்லாத சோகம் கொல்லாமல் கொல்லும் இறுதி காலத்தில் உறுதியாக நாமிருந்திருந்தால் இச்சூழலை மனமது வெல்லும் கவலையை கடந்து இயங்கிட தொடர்ந்து மனமும் துணியும் வாழ்க்கை புரியும் இறப்பே விடுதலை என்று இருப்பில் வெறுப்பு கொள்ளும் இறைவன் காலடி செல்ல பிறப்பை இறப்பு வெல்லும்...........

என் அப்பா

அரைகுறை ஆடையுடன் அங்குமிங்கும்  நான் அலைகையிலே அதட்டியவர் ஆடை உறுத்துதென அம்மனமாக கிடந்தார்  அப்போது உணர்ந்தேன் மரணம் மானப் பெரிதென ருசி பார்க்கும் பலருக்குள் உண்ணவியலா நேரம்  செவியை நா ஆக்கி ருசித்து ரசித்தவன் செத்து பிழைத்தோர் எத்தனை போரோ செத்து மடிந்தோர் எத்தனை பேரோ பலர் செத்துக்கொண்டே வாழ்பவரோ என செத்துக்கொண்டே உணர்த்தியவன் மரணத்தருவாயில் ஆசி செய் என கேட்கையிலே பெரு மூச்சு இழுத்து விட்டு  விண்ணுலகம் புறப்படவே  சொர்க்க ரதத்தில் சொகுசாக பயணித்து சுடுகாட்டு சூட்டில் விண்நோக்கி சென்றான் என் நெஞ்சாங் கூட்டில் நினைவாக நின்றான்.