Posts

Showing posts from September, 2024

மதுவே உயிரே

கலப்படமடைந்து கைக் கோர்த்துக் கலந்து நின்று வெளியில் விழிப் பார்த்தவற்றை வழிமறித்ததால் வாயடைத்தேன் ஆயிரமாயிர ஓட்டைகளுடைய வானின் மானம் காப்பாற்றப் பட்டாலும் மதியிழந்து மதுகுடித்த முகில்கள் மதியை எதிர்க்கப் போர்த் தொடுத்தாலும் குடி குடியைக் கெடுக்க குடிப்பழக்கம் உயிரைக் கெடுப்பதாய் மதுவோடு உயிரும்  மண்ணாகிப் போச்சு, புதைந்த விதைக்கு பாடமெடுத்து உயிரூட்ட. மதுவே கதியாய்  மதுவே விதியாய்  மதுவே உயிராய்  தானும் வாழ்ந்து  பிறர் வாழ - மழையாகிறது கார் முகில்.

நண்பகல்

காலணி தொலைத்த கவலையில் கால்கள் எங்கோ போகுது வலுவிழந்த வேளையிலே வான் முகில் வாழ்க்கையைத் தந்தது. ஸ்.... என வாய்ச் சத்தம் போட சூரிய ஒளியால்  சாலைகள் கால்களில்  செய்கிற யுத்தம் ஆக அக்கினிக் கோலத்து ஆகாயச் சூரியனோ நடுவானம் ஏறி வெறுங்காலில் நடப்போரைக் காரித் துப்ப தார்ச் சாலையைத்  தன் வாயாக மாற்றி கால்களில் காயம் செய்யும் காலைக் கண் வணங்கும்  கதிரவனின் காலக் கோலம் நிழல் தேடித் திரியுமிந்த செருப்பில்லா வெற்றுக்கால்  நடக்குமிம் மதிய நேரம்.

இயற்கையின் இதயதுடிப்பு

காலில் மிதி பட்டு காற்றில் அலைந்து  தலையில் அழுக்காய் ஆடையில் புழுதியாய்த் தூசியும்  நித்தம் வாசல் பெறுக்கினாலும் குப்பையுடன் தான் கிடக்கும். இதமாய் உணருந்தென்றலின் மொழி விதமாவதை யாரது அறிவது அறிவிற் சிறிய மனிதருக்கு அறிவுரை கூறும் இயற்கையிடம் ஆவேசம் நிறைந்திருக்கும் அதன் பெருங்கோபமிங்கு பதிலுரைக்கும். காற்று ஓலமிடும் மரங்கள் போர் புரியும்  கார் மேகத் துதிரமும் கண்ணீர் விட்டு அழும் சூறைக்காற்று போரில் உயிர் நீத்த மேகத்தின் தியாகத்தால் உருமாறி  சிற்றறிவு மனிதருக்கு  காட்டாற்று வெள்ளமென புயற்காற்றுப் பூதமென பேரலை உமிழ்வென சீற்றத்தாற் பாடமெடுத்து சீர் செய்து சீராகிறது  இயற்கையின் இதயத் துடிப்பும் இங்கு.

உதிரத்துளி

பயணத்தில் பார்த்த பணிகள் பயனுள்ளதாய் உணர்ந்த விழிகள்! பாடு பட்டு உழப்பவரே எப்பாடு பட்டேனும்  உழவுத் தொழில் செய்பவரோ கழனியைப் பதமாக்க நீரூற்றிச் சேறாக்கி  உழுது நில வளங்கூட்டி உயிரி உரமிட்டு வித்தைப் புதைத்து வித்தும் புத்துயிர்ப் பெற்று முளைவிட்டு வளர உயிருக்கு உணவளித்து அழகுக்கு மலரளித்து மூலிகைத் தாவரமாய்க் காலத்து கனி தரும் மரமாகி வேளாண் தொழிலின் பலமாகும் அனைத்தும் உழவனின் உதிரத் துளியாகும்.