மனிதம் மலரட்டும்
அறம் செய்திடவே தரம் தாழ்ந்திடுவோம்
தற்புகழ் மறந்தே தானஞ் செய்திடுவோம்
கரம் கொடுத்தே நாமுதவிடுவோம்
சினங்கடந்தே சில தொண்டுகள் செய்வோம்
மனமுடைந்தோர் மறு வாழ்வு பெற
ஆறுதலை நல் வாக்கு செய்யும்
வழி மாறித் தடம் மாறுகையில்
கல்வியால் நல்வழி காட்டிடுவோம்
கற்றறிவால் புதிதொரு விதிசெய்வோம்
உணவோ டுடுக்கை இல்லா உயிர்கட்கு
எடுத்திறைத்திடும் நல்மனம்
நம்முள் விதைத்திடுவோம்.
செருக்கை செருப்பாய் எண்ணிவிட
செருப்பாவோம் தலைமேலதுவும் ஏறிவிட்டால்.
ஈகையில் இன்முகப் புன்னகை பார்திடுவோர்
இறைவனை அவரினில் கண்டு மகிழ்ந்திடவே.
உயிரினும் மனிதம் உயர்வென மறவாமல்
உயிர் போகும் நிலையொரு உடற்கண்டு
உதவிக்கரம் தனை நீட்டாமல்
உற்ற பொழுதில் கண்டுங் காணாமல்
நமக்கது நிகழ்கையில் உணராமல்
மானுடம் வளர மனிதம் மலர்ச்சி அடையட்டும்.
இருக்கும் வாழ்க்கை இறப்பதற்கே
அதில் தேவைக்கதிக மிருப்பது இறைப்பதற்கே
வலிகள் வரும் வழி பலவிருந்தும்
வாழ்வு நல்வழி ஆவது ஈகையிலே
மனித நேயம் என்பதிங்கு
மனிதற்கானது மட்டுமல்ல
எல்லாமும் என்னுயிரே
என்றெண்ணம் வருமாயின்
மானுடம் என்ற சொல்லுக்கு
மனிதமென்பதே சான்றாகும்.
Comments