Posts

Showing posts from February, 2023

நான் நானே

நா‌ன் யார் என்பதற்கான  தீர்மானத்தை நீங்கள்  எப்படி எடுப்பீர் . உங்கள் கண்ணும் உங்கள் காதும்  உங்கள் வாயும் உங்கள் சிந்தையும்  தரு மடையாளத்தை எனக்கு எப்படி கொடுப்பீர் நான் கருவில் ஒரு உயிர் பிறந்ததும் ஒரு உடல்  என் அங்கத் தொகுப்பழைக்க பெயர்  கல்வி காலத்தது படிப்பு  பொருளீட்டும் தொழில்  சூழலை அணுகுமென் கருத்து குடும்பத்தில் உறவு இல்லறத்தில் பண்பு  பேறுற்றால் பெற்றோ னெனுங்கடமை மரணத்தில் நானென்பதை யார் சொல்லுவார் அந்த இறைவன் முன் அவன் தந்த விதிவிட்டு யார் விலகுவார். இவை உணர்ந்து  இவ்வுலகுலாவிடும் நான் நானே......

அவளன்பழகன்

யாரோ எனை விட்டெரிந்த போது புதைந்திருந்தேன் விதையாய் முளைத்தேன் சிறு துளிராய் நான் வளர காதலெனும் நீர் பாய்ச்சினால் அன்பிலே..... காதல்  ஒரு வித அனுபவம்  அதில் காலம்  கண பொழுதினில் எனை மாற்றும் உயிரே.... என் மனமது உனை எண்ண நினைவுகள் வந்தென்ன நிஜம் தரும் சுகத்திற்கிணை  ஆகுமோ.... கைவிரல் மேலுள்ள  சில மயிர்கள் மட்டும் மெல்ல அவளை தொட்டுணர்வு கொள்ள அந்த சுகம் தந்த கணம் மீண்டும் நேருமோ..... வண்ண பூக்கள் தோட்டம் வந்தாளவள் பிறை நிலவாட்டம் மெலிந்த உடலில் நெளிந்து வந்தாள்  அன்பை பொழிந்து என்னை  அவளன்பழகன் ஆக்கிக் கொண்டாளே..........

கண்

வாய்மொழி ஆயிரம் கதைத்தாலும் விழித்திரை விடாது படமெடுக்கும். சட்டென பார்க்கும் போது அந்த பார்வை  ஒரு பாவை அவள் பார்வை  புது பிறவி தரும். விரும்பா பேச்சுக்கு இமை விரிக்கும் முறைத்தலில் பதிலுரைக்கும். இதழ் சிரிக்கா  சில நேரம் இமை சிரிக்கும்‌ . புருவத்து புதிராகி பருவத்து புதிர்களில் பக்குவமாய் பயணிக்கும். மனக் குரலின்  மாய வடிவம் காய உடலில்  கண் காணும் கனவே. அங்குலத்து வெண் குளத்தில் அங்குமிங்கும் அலைகிறது மயிர் கரைகள் மூடுகையில் உடலின் புதையலென புல படுகிறது. ஒளியை விட கடந்தூடுருவும்  கையும் மெய்யும் தீண்டும் முன்  விழிகள் தீண்டும் அந்நிலையில் தீண்டாமை விரோதத்திற்கு தீர்ப்பளிக்கும் நீதிமானே.

குமரிக்கடல்

அலைமோதும் பாறையின் மீது சிலையாக நான் அமர்ந்திடவே மூன்று கடல் கூடும் இடம்  அதில் நெஞ்சம் மட்டும்  தன்னை மறந்து லயிக்கிறதே இயற்கையில் கணங்கள் கலந்து கவிக்கிறதே வானுயர்ந்த வள்ளுவனை வந்தடைந்தேன் அவர் காலடியில் குறளின் வரிகளில் வாழும் குரலுக்கு வடிவம் கண்ட பேருவகை இப்பேருலகில். வங்கமும் அரபியும் சங்கமிக்க  அதை எதிரொலித்து  இந்திய பெருங்கடல் கூச்சலிடும் அது வீரத்துறவியின் காலை ஆரத்தழுவிவிடும்  இயற்கையின் தாய் மொழி தெரியவில்லை அதன் முது மொழியும் புரியவில்லை புது உரை பல அவள் தருகின்றாள் அதன் பொருளை புத்திக்குள் விதைக்கின்றாள் வானொடு வளியும் நீரும்  இந்த ஆளொடு மனதின் ஆழம் ஆளும் நாளும் இங்கே வர ஆவல் கூடும் கடல் தொட்டு கரை வீசும்  அந்தத் தென்றலின் இசையை மீண்டும் மீண்டும் கேட்கும்.

காதலில் காதல்

சிலர் என்னை தவறாய் எண்ண நீ மட்டும் ஏன் தவமாய் ஏற்றாய். வலிக்கும் போதெல்லாம்  வாழ்க்கை வழித்துணையாவது அவளன்பால் தடுக்கி விழுகையில்  தாங்கி பிடிப்பவளே‌. மீசையை முறுக்கிவிட்டே  எனக்கு மயக்கம் கொடுப்பவளே விரல்களை கோர்த்து  விடைகளை தந்தவளே. விழி மோதி காயமுற்ற இதயத்தில் காதல் மருந்தானவளே பூவிதழ் போன்ற உன் இதழ்களினால் என் இதழொரு பூலோகத்தை படைத்தவளே. பைத்தியம் பிடித்த என்னுள்ளே  காதல் பக்தி விதைத்தவளே பட்டு போன செடியில் கூட பட்டாம்பூச்சி அமர்ந்திடுமோ. கார்குழலாடும் பேரழகி  அவள் கருப்பு நிறத்தொரு கட்டழகி வட்ட நிலவதும் பொலிவிழக்க அன்பை பொழிந் திவள் அழகானாள். சரிகமபதநி தெரியவில்லை அவளின் சிதறிய சிரிப்பினிலே அபூர்வ ராகமது மௌன ராகமெனில் அதற்கொரு கீதமாவ தவள் இதழ்கள் தான்.