நூல்கள்
என்னோடு விளையாடா எண்ணத்தில் விளையாடும்
புத்திக்கும் அகத்துக்கும் புதுமை பல தந்தோடும்
புரளும் பக்கங்களில் பொருள் தரும் புலமை
எழுத்தும் அறிவும் ஆரத்தழுவும் இனிமை
மை விரலின் அத்தாட்சி நடத்தும் ஓர் அரசாட்சி
ஏட்டு மையின் அத்தாட்சி எழுபிறப்பும் அறிவாட்சி
வாழாத வாழ்வதனை வாசிப்பில் அறிந்திடலாம்
வழியறியா மனிதர்க்கும் வழித்துணை ஆகிடலாம்
கற்றதை எடுத்துரைக்கும் அறிவுச் சுரங்கம்
காகிதப் பக்க எழுத்துள் அடங்கும்
சிந்தனைக்கு சிறகாகி சித்தத்தில் பறக்கவிடும்
புத்தகமெனும் போர்வைக்குள் பெரும் யுத்தத்தை நிகழ்த்திவிடும்
வாழ்வியலும் வரலாறும் வழிமுறையும் எடுத்துரைக்கும்
காதல் முதல் காவியமும் கவிதை வரை கலந்திருக்கும்
காலமெல்லாம் வந்தோரின் வல்லமைகள் பெரிதிருக்கும்
வெற்றுக் காகிதமென கசக்கிவிட்டால் காலப்பிழை ஆகிவிடும்
எல்லாமும் புத்தகத்தில் என்றாலும் என் எண்ணம்
என் புத்தகமென்று எதைச் சொந்தம் கொண்டாடும்.
Comments