நில இளவன்
இல்லற ஆசை எனும் இன்ப காற்று வந்து
சில்லென இருளில் மெல்லத் தீண்ட
சிற்சிறு விண்மீன் சித்திரமாகிட
தென்றல் பேசும் மொழியை புரிந்து இலைத்தழைகளும் தலையை ஆட்டிட
மாய உடலென படிந்த நிலத்தில்
உயரிய மலைகள் தலையென விளங்க
ஆழ்கடலழகிய கால்கள் ஆகிட
வண்ண விசாலப் பசுமை நிறமோ
வாலிப எழிலுடன் வசீகரம் செய்ய
இருள்வரும் பொழுதில் இருக்கிற வியப்பை
இன்ப மென்றெண்ணி மோகம் கொள்ள
பால்வெண் நிறமதி முக அழகில்
பதினாறு செல்வத்தை மறைத்தவளை
அன்பவா கொண்டு சிந்தையிலே
உன்னை மயக்கத்துணிந்தவனை
கண்டு வெட்கி முகிலுக்குள் மறைகையிலும்
உன் எழிலும் மறையாமல் ஒளிர்கிறதே
கரு மேகத்தை தூது விடுத்து
மழை நீர் போலன்பைத் தூவித் தெளித்து
தனக்கு உயிர் தரும் கதிரவனை
நாற்றிசைப் பறந்த
இளவனாம் திரு நிலத்தவனை
பார்வையால் பயனுறச் செய்ய
அன்பவா வாய் மட்டும் நிலை பெறவே
அடைய முடி...யாதென எண்ணி வருத்தம் கொள்ளாமல்
தன் வாழ்வில்-பல்லுயிர்
புத்துயிர் கொண்டு வாழ்வதற்க்காய்
தியாகம் செய்தானிந்த நில இளவன்.
குறிப்பு :
இளவன் என்கிற வார்த்தை இள வயது உடையவன் என்பதை குறிக்கும்.
அன்பவா என்கிற வார்த்தை காதல் என்பதற்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டது
Comments