குடும்பம்
வயது மூப்பு வரும்
வார்த்தை தடித்து விழும்
பேச்சு எரிச்சல் தரும்
ஏளன பார்வை ஒன்றே
எதிரியென எண்ண வைக்கும்
இயலாமை ஏற்காமல்
இயங்கிட இதயம் துடிக்கும்
கடந்த கால அனுபவத்தில்
கற்சொல்லடி பட்டதெல்லாம்
அனுபவமெனும் பெயரில்
அங்கங்கு வழிநடத்தும்
காசு பணம் பகிர்ந்தளித்தால்
பார்த்து கொள்வார் என தோன்றும்
எப்போதும் அவர் சொல்லை
கேட்கின்ற ஆள் தேடும்
ஏதோவோர் சூழலிலே
எதிர்ச் சொல்லைக் கொட்டி விட்டால்
அவருள்ளம் வெந்து விடும்
நமக்கோ
தொனதொனப் பேச்சு
தொந்தரவாகிவிடும்
வேலை விட்டு வீடு வர
கோபங்கள் கொப்பளிக்கும்
நிதானமே நிதானமாகும்
ஓய்வெடுக்க உளமேங்கும்
மீத வேலை மீண்டும் வந்து
துரத்திக் கொண்டே தானிருக்கும்
எல்லோரின் கருத்துகளும்
எதிர்பாராமல் எதிராகும்
உடல் நலக் குறைகளும்
உள்ளூர எரிச்சல் தரும்
என்ன செய்வதென
புரியாத புத்திக்கு
யுத்தகளச் சிந்தனையில்
அமைதிக்காய் அலைபாயும்
வளரிளம் பிள்ளைகளோ
கண்ட வாழ்க்கை சுகமென்று
வீட்டிற்குள் வழக்காடும்
வீட்டுக்கு பொருளீட்ட
வெளி சென்ற வேலையாள்
வீட்டுக்குள் வரும் போது
கணவனாக கனவு காண
கண்களாலே கொப்பளிக்கும்
கோபமான வார்த்தைகளை
கண்டதும் கனவு கலைந்துவிடும்
இரவு தூங்கும் பொழுது
உறவும் சுகமாய் உறங்கிவிடும்
Comments