சுனிதா வில்லியம்ஸ்
கருவறை இருட்டில் உதித்து
பிறப்பில் மண்ணை மிதித்து
சமூக உருட்டைக் கடந்து
பாலினப் பேதம் மறந்து
சரித்திரம் படைக்க
பிறப்பாலே சங்கமித்தாய்
பெற்றோரால் இப்பாரதத்தில்.
நாடுகளிடை உள்ள நல்லுறவில்
நாடுகள் தன்னிடம் - உதவியை
நாடிடும் அளவுள்ள படிப்பறிவால்
நல்ல இப்பிறப்பில் உன் நம்பிக்கையை
நாங்களும் கண்டு வியந்திடவே
நாங்கள்
காட்டையும்
கடலையும்
காற்றையும்
நெருப்பையுங்கண்டு களித்துள்ளோம்
காண இயலாப் பெரு வெளியில்
கீழிழுக்காப் புவிவிசையில்
ஆய்வு செய்யச் சென்றவளே
இயந்திரப் பழுதுக் காரணத்தால்
பெருவெளியும் உன் வரவில்
நெடுநாட்கள் மகிழ்வடைய
பெருந்திட்டம் போட்டிற்றோ?
மானுடத்தை விஞ்சும்
ஒரு மறைப் பொருளை உணர்த்திற்று
மதித்துணிச்சல் நிறைந்திருந்த
மங்கையுடனான மாண்புமிகு நண்பரையும்
வானவெளியிலே வாழ இடம் தந்து
வருங்காலத் தலைமுறை
வாழ வழித்தந்து.
அறிவுடைய மனிதர்களின்
ஆற்றலுக்குச் சிறப்பு செய்து
அறிவுச் சிக்கலினை
அங்கங்கே திருத்த
காலத்தின் பதிலில்
ஆசானாய்ப் பிறப்பெடுத்து,
அண்டந்தாண்டிய அவ்விடத்தில்
அவளுக்காய் அமைந்த
அழகானத் தாய் வீடோ?
ஈர்ப்பு விசை இல்லா இடமாம்
உண்மைதான்..
மேலிருந்து உன் செயலால்
எங்களை நீயே கவர்ந்ததால்
அவ்விசைக்கு ஈர்ப்புவிசையல்ல
கவர்விசை எனப் பெயரிட்டேன்..
கவலையுடன்.
நண்பர்கள்
விஞ்ஞானம்
இவையெல்லாம்
இல்லாதிருந்திருந்தால்
எஞ்ஞானம் இவர்களுக்கு
மெய்-ஞ் ஞானம் ஆகியிருக்கும்.
மீண்டும் உன் பாதம்
பூமி படும் வேளையிலே
பார்வை மட்டும் பட்டவுடன்
கை மட்டும் அசைத்தது தான்
சொல்லிலா உணர்வெழுந்து
கவலைகளாய்ச் சூழ
என் கண்களில் நீர் வடிய
புரியாமல் தவித்தேன்
அவள் வருகையை நினைத்த ஆனந்தமா?
இல்லை
அவளின் நிலைக்கண்டு தவிக்கும் உளவருத்தமா?
என்றறிய விரும்பாமல்
ஆனந்தக் கண்ணீருடன்...
பலமுறை விண்வெளிப் பார்த்த
சுனிதா உனக்கு
வாஞ்சையுடன் எழுதும் நன்றி வரிகள்.
Comments