செத்துப் பிழை

சிதறிய அரிசி
மலையுயர மனிதனுக்கு ஒரு பருக்கை‌.
சுமக்க வழியின்றி இழுத்துச் செல்லும் எறும்புக்கு அது பொக்கிஷம்.
நான் ஒரு எறும்பு

பெற்றோர்களின் பாதங்கள் தொடும்  உதடுகளுக்கு பாவங்கள் இல்லை.

கவிதையும் தந்தையும் ஒன்று வார்த்தைகளால் வாழ்வை செதுக்குபவர்கள்.
வாழ்ந்து பாருங்கள் கவிதையின் வார்த்தையிலும்
தந்தையின் வாழ்த்திலும்
அவன் எனும் பேரழக ராஜனுக்கு
இவனே ஆணழக வேந்தன்.

சாஸ்திரங்கள் என்பது சடங்கு 
ஆன்மீகம் என்பது சங்கமம்,
சடங்குகளை பின்பற்றினால் தான், சங்கமத்தை அடையும் போது சடங்குகள் எதற்காக என்று விளங்கும், இல்லையேல் சந்தி சிரிக்கும். சங்கமமடைந்தால் உடலே ஆலயம் உள்ளமே தெய்வம்.

அற்ப சுகங்களென்று 
சொற்பமாய் எண்ண வேண்டாம்.
அற்ப சுகங்களே சில நேரம் 
அற்ப ஆயுளுக்கு காரணமாகவும்,
அற்ப ஆயுளில் சில நேரங்களில்  
ஆகச் சிறந்ததுவு மாகலாம்.
அற்ப சுகங்களுக்கு ஆசை படுங்கள் தவறில்லை 
பழக்கப் பட்டுவிடாதீர்கள் பழிவாங்கியே தீரும்.
யாதுமானவன் இறைவன் 
அவனை அடைய நமக்குப் போதுமானவனாய் 
பெற்றோர் உ(ரு/ற)வில்.

ஜோதியானவனை 
வீதியில் தேடுவதும்.
நீதியினை நிதியால் வெல்வதும்.
நிலைத்திடாது

செத்துப் பிழைப்பதற்கும்
செத்துக் கிடப்பதற்கும்
இடையில் இருப்பது உயிராம்....
சாவில் இருந்து 
உயிருடன் இருக்கும் நினைவை 
தரும் அந்த சொல்லிலா
கணச் செயலாற்றலே உயிர்
ஆகையால் செத்துப் பிழை

வாழ்கை மனிதனின் பசியை போல 
அதன் அளவுக்கு ஏற்ப
காதல் காமம் ஆசை பாசம் 
விருப்பு வெறுப்பு துறப்பு ......
என பல்வேறு ருசிகள் அதனை அழகாக்குவதோடு அழிக்கவும் செய்கின்றன.

எல்லாம் வல்ல ஒருவன் 
எங்கும் நிறைந்த இறைவன் 
தங்கும் இடமாம் இதயம் 
தங்கிய பின்னோ 
அவனின் சிந்தையே உதயம்.

படரும் பேரொளியால்
பார்வை பாழாகிறது 
கைப்பேசி கண்ணின் எமன்.

கொணர்ந்ததைக் கொடுத்திடும் 
ஆசையில் 
ஆசையாய்ப்
புணர்வதைக் கொணர்வது காமம். காதல்!!!

பேரொளியான சூரியனை விட
காரிருளில் வரும்
விண் மீனொளிகள்
இரவின் விழிகள்
இயற்கைக்கது மழலை மொழிகள்.

இணைகோடுகளின் இடைவெளி
தடமாகவும்.....
ஏணிப்படியாகவும்....
பயணத்தில் கூட முடியலாம்
இமயத்தை கூட அடையலாம்.

உடலாக, பிறப்புக்குமிறப்புக்கும் இடையில்
உறுப்பாக வளர்வதன் பயன்தானென்ன.

அர்த்த மற்ற சொல்லின் அர்த்தம்
அடுத்த நொடி நிலையில்லாத 
நிதர்சனத்தின் நிரந்தர வார்த்தை
- வாழ்கை .

இனிப்பென தெரிந்து
நக்கத் துணிவது இயல்பு
சுவையறியா அதனை 
நக்கித் தின்று பருகிட
துடிப்பது போன்றது வாழ்வு.

சிலருக்காய் சில நேரம்
சிந்திக்கா சில மாற்றும்
சிறைபடுமிதயம் அவளிடம் 
வதைபடவோ.

அழகெனும் இலக்கணத்துடன்
அவளின் அன்பெனும் 
பாடம் படிப்பதே காதல்.

யாருக்குள் யாரோ...
யாருக்காகவும் யாரும்
இருக்க இயலாத போது 
யாருக்காக யாரோ ஒருவர் 
யாரிடமோ சொல்லும்
ஏதோ ஒரு விஷயம் யாருக்கானதோ..

அருகில் வாழ தான் முடியவில்லை
அருகில் பார்க்க உதவிய அறிவியலுக்கு 
நன்றி.

சாகப் பிறந்த மனிதர்களுக்கு
ஆசை கொண்ட வாழ்க்கை
பேராபத்தானது 

நினைவுகளோடு வாழ்வதற்காய்
நிகழ்நேரத்தை இகழ்ந்துவிடாதீர்
நினைவுகளுக்கு மருந்து தேடி
அதிலும் பயண் இல்லா போது 
பாதை மாறிடும் 
வாழ்வின் வழியை மாற்றியும்.

மறப்பதும் 
கடப்பதும்
சாதாரண விஷயம்
நினைப்பது மட்டும் தான்
நாம் உயிரோடு இருப்பதை
உணர்த்தி கொண்டே இருக்கும் .

இதழ் உராய்வில் ஏற்படும் சத்தமும்
இதயத்தின் சத்தமும் சண்டையிடுகிறது
அவளது முத்...தால் 
அவளது முத்.......திற்காக
 உயிர் வாழ்பவனின் உயிர் துடிப்பு அவள் உதட்டில் உள்ள படியால்.

அவளுடன் பழகவும் கதைக்கவும் ஆசை
அவள் மனதில் நான் யாரோ...

இடையூறாய் இருப்பதைவிட 
இடைவெளியோடு கடப்பது ஆகச் சிறந்தது.

நாம் மறக்க நினைத்து 
மறக்காதவையே
நம்மை மரிக்க வைக்கும்

ஏன் இந்த பிறப்பு
விலக நினைத்து
விரும்பி அழைக்க
திருந்தி வாழ்ந்து
திரும்ப முளைக்குதே
இறை பக்தியும் 
காதலும் இதிலே அடங்குதே.

மறப்பதும்
வெறுப்பதும்
எளிது.
யாவரும் யாவையும் 
பொறுப்பது அரிது .

துவண்டு விழும் போதெல்லாம் பாதாளத்தில் அஸ்திவாரத்தை பலமாக்கு,
அப்போது தான் துணிந்து எழும் போது உனது கட்டுமானம் வலிமையாய் இருக்கும்.

ஒன்றுமில்லாத இந்த
வாழ்க்கை
எல்லாம் உனக்கானது என்றுணர்த்தும் வரை பொறுத்திரு.

சந்தோஷத்தில் சலிக்கவும்
சலித்தலில் சந்தோஷிக்கவும் பழகுங்கள் 
வாழ்க்கையை துறப்பதைவிட
வாழ்க்கையில் துறக்க 
வாய்ப்புகள் ஏராளம்.

பாட்டு அரசியல் 
காட்டு அரசியல் வீட்டு அரசியல் 
ஓட்டு அரசியல் தீட்டு அரசியல் 
நோட்டு அரசியல் மாட்டு அரசியல் 
நீட்டு அரசியல் பாட்டு அரசியல்

உருகி காதலிக்க 
அவள் ஒன்றும் பனிக்கூழ் அல்ல
உயிர்விட்டு காதலிக்கிறேன்
நான் உயிர் வாழ 
நாளுக்கு நாள் மரணமடையும் 
இதயத்தின் உயிரே 
அவளின் நினைவானபடியால்...

சொல்லாமலே புரிய வைக்கும் சிலரை 
புரியாமலே பிரிந்து செல்லும்
பலரில் ஒருவராய் இருப்பதை விட 
புரிந்து விலக்கூடிய ஒருவராய் இருக்க வேண்டுகிறேன்.

வழி செல்லும் 
வலி வெல்லும்
இதை இணைக்க
விழி சொல்லும்
செயலாற்றிட 
வரலாறும் உன் பெயர் கொள்ளும்.

வேண்டாமென விலக
வேண்டுவாரோடு இணைய 
விதியின் வேண்டுதல்கள் 
நிராசை ஆவதில்லை.
இப்படிக்கு இல்லறமும் துறவறமும்.

சிலர் இவ்வளவு தானென தெரிந்து விட்டால் 
அங்கு எவ்வளவு என்ற கேள்வி 
எங்கு வந்தாலும் பதில் கிடைக்காது.

யாருக்கு தெரியும்
அவள் அன்பு ஆழமானதா 
இல்லை ஆபத்தானதா என்று
ஆழமான அன்புகடலில் தான்
ஆபத்துடனான முத்தும் கிடைக்கிறது .
முத்தை கொடத்தால் 
முத்தை தருவாளெனும் போதே
ஆபத்தும் அங்கே அழகாகிறது.

சுற்றும் உலகில் 
ஓரிடத்தில் தடைபட்டு 
சுற்றத்தை எண்ணி
வீணாக சுற்றாமல்
விழுந்தாலும் எழு 
தரை கூட ஏரின் நுனிக் காயங்களால் 
அழுவதால் தான்
உழுதலால் விதைகள் கூட விருட்சமாகின்றன.

வெளி வானில் தெரியும் நிலவை விட 
மென்மையானவள் அவள்
ஆனால் அமாவாசை போல் 
ஆசை இல்லா நேரங்களிலெல்வாம்
அலைய விடுகிறாள்
அன்பிற்காக.

அவள் இடுகைகளுக்கெல்லாம் இதயம் தந்ததால் இதயமற்றவன் ஆகிறேன்.

இதயங்களை பெற தயார் ஆனாலும் பகிர்வால் என்னுடன் உரிமை கொண்டாடுவதை விரும்பவில்லை .
இப்படிக்கு இடுகை.

கடன் அன்பை முறிக்கும்
ஆனால் இவ்வுலகம் 
கடன் வாங்க சொல்லியே 
சபிக்கும்

கர்மத்தால் பிறக்க 
கர்ப்பத்தில் உயிர்கள் உதிக்கின்றன.
அது சொர்க்கத்தை அடைய 
மரணத்தின் வரையும் 
படாத பெரும்பாடு படுகின்றன.

ஆயுள் வரை என் காதலியாய் இருக்க
அவசரமாய் என் காதலை ஏற்றுக் கொள்ள 
கட்டாயப் படுத்துவேன்
ஏனெனில் காதல் கடந்து என்னவளாய் உணர்வதால் ....

நமக்குள் இருக்கும் 
இறைவனை 
இந்தப் பிரபஞ்ச வெளியில் 
தேடித்திரிந்து.
அழுக்குகள் அண்டிக் கிடக்கும்
பிண்ட உடலில்
வியர்வைகட் சலமல 
மோகவிந்துக ளாமிவை தங்கிடில் 
யோகவிந்திற் குரியவனாகிய - இறைவன் விருந்தின ராகிடுவானே.

அன்று
பேரிரைச்சலானது
உலகத்தின் மௌனம்.
இன்று
பெருமமைதியாகிறது
உலகப் பேரிரைச்சல் 
 - தந்தையின் மரணம்.

ஊரே மலர்த் தூவி சோகத்துடன் வழியனுப்பினாலும்
அவ்வொற்றை சடலத்தை 
ஆவலாய் வரவேற்று ஆதரவளிக்கும் 
செத்தாலும் சுடுகாடு தாய்வீடு போல.

எனக்காய் 
எழுதும் முதற் சில வரிகள்
கார் முகிலும், காற்றும் கவிபாட
கார் குழலும் 
கவி இசைக்காட
கவிஞனை ரசிகனாய் ஆக்கியதாரோ ?

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை