Posts

Showing posts from October, 2025

சேவற் கொடியோன்

கந்த கடவுளை  சொந்த கடவுளென நிந்தை தவிர்த்து  சிந்தை செய் மனமே கந்த கடவுளே காணும் காட்சியது  நிந்தன் பேரருளே வாழும் வாழ்க்கை அது  வெற்றி வேலவனின் வாரிசாவதுவே ஆறு முகத்திலும்  நாவி லுதிர்த்திடும் நல்ல தமிழ் மொழியே அதனைக் கொண்டே நாளும் உன்னை  நானும் வணங்கிட வேண்டும்  உயிரின் ஒளி வழியே அன்னை பார்வதி  தன்னை உனக்கென  வேலாய் தந்திட்டாள் அண்ணன் உனக்கென உலகம் ஏற்பட  பழத்தால் பலம் தந்தான் அப்பன் சிவனுமுன் சீடனாகி உன்னை  ஆண்டவன் ஆக்கிவிட்டான் சூரபத்மனை போரில் வெல்ல பல  தீரம் புரிந்தவன் நீ  தேவர் குலம் செழிக்க மூவர் உலகுக்கும்  முதன்மை ஆனவன் நீ தேடி வந்தவரின்  தேவை தீர்த்து வைக்கும்  தெய்வமானவன் நீ காதல் மனைவியுடன்  இந்திரன் மகள் சுந்தர தெய்வானையோடு இத்தேசம் ஆள்பவன் நீ அருணை மலை நாதன்  அண்ணாமலை அவன்  அருணகிரிநாதனாய்  உன் புகழ் பாடினானோ பாடல் கேட்டு  மயில் மீதமர்ந்து  அருளாசி தந்த எங்கள்  சேவற் கொடியோனே.

இதழி

ஏன் என் கண்களில் உயிர் உணர்ந்தேன்  நீ என் கண்களில் கனவானதனால் உன் விடியலுக்கு என் இருள் உதவிடட்டும் நம் காதல் இரவுகளின் இனிமையினை  விண்மீனொளிகள் பறைசாற்ற முகச்சதை பசிக்கு அமுதூட்ட வியர்க்காத இதழ்களால் பசியாற்றி முத்தத்தில் ஒத்தடம் தந்தவளின் மூச்சுக் காற்றை பெற்றவுடன்  உணர்வுகள் புத்துயிர் பெறுதடி காதலென உன் தாங்கு அங்கத்தில் நான் இதழுணர்வாய்த் தந்ததெல்லாம் என் கனவில் தொங்குதடி உன் கணைக்கால் கொண்டிருந்த  நானெனும் கொலுசு நான் தந்ததாகி நாம் ஆன போது பிடியாய் நீயும் களிறாய் நானும் விதியின் விளையாட்டு திடிலில் அன்பு கோபம்  மௌனம்  சகிப்பு எல்லாம் கடந்து நல்லா இருப்போம் எல்லாம் வல்ல பெற்றோரின்  பெருங்கருணையினால் காலம் முழுதும் களித்து மகிழ்வோம் உலகம் அனைத்தும் சுற்றித் திரிவோம்.

நினைவில் நின்றவள்

நினைவுகள் கூத்தாட  நிஜங்கள் போர்த்தொடுக்க இனிமை ஆவது  இதம் தரும் அவள் முகம் சுகம் தரும் அவள் மொழி தமிழ்த் தந்த தேனே சுகிக்கிறது உயிர்வளி காதலால் தானே