Posts

Showing posts from December, 2017

' துப்புரவு '

மனிதன் கழிவை மனிதன் அள்ள எண்ணம் முன்வரவில்லை அள்ளும் மனிதனை மனிதனாய் எண்ண எண்ணம் எண்ணவில்லை , துப்புரவென்றே சொல்லி மனிதக்கூட்டம் ஏசும் மலக் கழிவுத் தேங்க்கிக் கிடந்தால் உந்தன் வீட்டில் நாற்றம் வீசும் , ஏற்றத்தாழ்வு உள்ள வாழ்வில் இறங்க்கித்தூரு வாரும் அவர்கள் மனமும் சாதிய பேதச் சங்கடத்தில் வாடும் , சேற்றில் காலை வைத்து நல்ல சோற்றைத்தரும் உழவன் அவனை விட புனிதன் மல கழிவை அள்ளும் இந்த மனிதன் ,  குப்பை வண்டி வாசலில் வந்து  விசிலின் வழியே கூவும் காலை நேர அவசர வேளையில் சிலரோ அவர் மேல் கொள்ளும் கோபம் , ஓர் நாள் அவன் வரவில்லையென்றால்  அன்றே அறிந்து கொள்ளும்  அவ் உள்ளம் கோபம் மறந்து செல்லும் . அவனின் குடும்பப் பின்னணி என்னவென்று யாருக்கும் தெரியாது தொழிழில் முன்னணி குப்பை இன்றி வேறொன்றுக் கிடையாது . சுத்தம் செய்தே நித்தம் வாழும்  உத்தமரிவர் போல்  வேறு யாரும் இல்லை . சமூகம் மட்டும் எப்பொழுதும்  அவனுக்கென்றே தருவது மட்டும் தொல்லை .

' நவீன உலகில் நான் பாவப்பட்டவன் '

சொல்லாமல் விட்டதும் , சொல்ல முடியாததும் , கரும் புள்ளிகளை கடந்ததும் , கனவுகளை சுமந்ததும் , அவமானம் கடந்ததும் , அழுகைகள் வழிந்ததும் , ஆசையின் தூண்டலும் , அடக்குமுறை தவிப்பிலும் , வலி தந்த சுற்றமும் , நல் வழி தேடும் உள்ளமும் , மற்றவனின் கண்களில் குற்றவாளி யாவதும் , மனிதனாய் விளங்கிட விட்டு விலகிச் செல்வதும் , படைப்பினில் மாற்றமும் , ஆண் பெண் தோற்றமும் , தகாத சொல் கேட்டு தாங்காத செவிகளும் , அதில் துணிந்தே திகழும் திருநங்கைகளும் ,  சொல்லாத  பொல்லாத வாழ்வியல் , ஓரினச் சேர்க்கையெனும் பாலியல் .

' நட்பு '

கடவுளின் கரமது வரம் தரலாம் நட்பின் வரமது வாழ்வு தரும் . சிற்பச் சிலையது கடவுளல்ல சிறப்பை சேர்க்கும் நட்பே கடவுளென்பேன் மலர் வளையம் இறப்புக்கு அழகூட்டும் நினைவலையும் நட்பை அழகாய் நினைவூட்டும் என்றும் நறுமணம் வீசும் பூந்தோட்டம்  நட்புச் சாலையில்  மனிதர்களிடையே கடவுள் செல்கிற தேரோட்டம் நட்பின் சிறப்புகள் தொடரட்டும் ஏழுலகு நட்பினால் தானே இந்த பூவுலகு . மனிதராய் பிறந்த நாமெல்லாம் தூண்டிலில் சிக்கும் மீன்களல்ல , கூண்டினில் வாழும் கிளிகளல்ல , இதயக்கூண்டின் கிளியாக - இருக்கும் நட்புக்கிணை இங்கு ஏதுமில்ல .

' இயற்கையாம் இறைவன் '

உல்லாச உலகில் உற்சாக இறவு , உன்னோடு தான் நிலவே என்னுடைய  உறவு. இரவுக்குக் கோடிக்கண் வைத்தான் - அவன்  பகலுக்குள் வேடிக்கை படைத்தான், வாழ வளமுள்ள நிலத்தை வாடகை விடுத்தான் சுயநலத்தால்  இயற்கையை மனிதன் அழித்தான். பணம் எனும் காகிதம் பெற - தம்  நற்குணங்களைப் பாடையில் விடுத்தான் , ஓர் நாள் அவனும் துடித்தான் , காசது மாசென் றுணர்ந்தான் , எல்லாம் கால் தூசுக்கு நிகரென அறிந்தான் , மாண்டதும் மீண்டும் இயற்கையோ டிணைந்தான் ஆதியும் அந்தமும் அதுவெனத் தெளிந்தான் , பின் இறைவன் என்பதே இயற்கையென்றான் .

' இராணுவம் '

உறுதி கொண்டு குருதி சிந்தி உயிர் தருவாய் , எதிரிகளை அழித்திடவே நீ பிறப்பாய் , பல உயிரும் தாயிடத்தில் பால் குடிக்க , நீயோ உன் குருதி சிந்தி தாய் நாட்டிற்கே பால் வார்க்கின்றாய் . ஆயுதம் ஏந்தி நின்றோரில்  எங்கள் நாயகனாக திகழ்ந்திடுவாய் எப்போதும் விழித்திருந்தே   எதிரிகளை ஒழித்தருள்வாய் . தீமைக்கு நோயாகி தேசத்தின் தாயாகி,  பாயப் பதுங்கும் புலியாவாய்  , எதிரியை பார்த்ததும் பற்றும் தீயாவாய் . உயிர் பறிக்கும் கோழையிடம் , உறவுகளை நீ இழந்து உறக்கமதை நீ துறந்து பசி மறந்து பகைவனின் உயிர் பறித்து - எங்களுக்கு , அன்னை காட்டும் நில ஒளியாய் நீ திகழ்ந்தே இருள் நீக்கி வைப்பாய் காணியினை கருத்தாக கரு சுமப்பாய்

' விவசாயம் '

ஏர் பிடிச்சி நீர் உழுத இடமெல்லாம் -  வித்துக்கு  உரமாக உதிர்ந்த உதிர வியர்வை , சீர் தூக்கி கட்டுமையா நீ வாழ்ந்த வாழ்வை. காளைய ஒட விட்டு  காலமெல்லாம் காத்த நிலம் , கார்ப்ரேட்டு காரர்களால்  காம்ப்பவுண்டு நிலமாகிடிச்சே ! சானமெனும் உரம் தெளிச்சு சோறு தந்த உழவனுக்கு உரங்களினால் உயிர் போகும் உயர் நிலை  உழவனுக்குகந்த நிலை இதுதானா ? வேகாத வெய்யிலிலே வயலுக்கு பசிக்குமென வறப்பு எனும் வழி வெட்டி வடியவிட நீர் பாய்ச்சி பசுமைக்கு பசியாற்றி களிப்படைந்த கண்களில் கண்ணீர் வழியும் கவலை நிலை ஆனதே . கிடைக்காத நீருக்கும் கருணையாய் கண்ணீர் அதைப் பார்த்தும் கிடைக்கவில்லை கர்நாடகத் தண்ணீர். விவசாயம் செய்தவனெல்லலாம் வேலையில்லா வெறும்பயலென சொல்லும் சொந்தங்களின் வாய்களில் , விழும்  வாய்க்கரிசியாய் விவசாயம்  தன் பெருமையை நிலை நாட்டுதம்மா.

' காதலும் ' ' காலனும் '

காதல் மனங்கள் இணையும் திருமணம் இங்கு சாதி கலவர காலனின் சிறையினிலா ? உயிர்கள் பிரிந்தும் காதல் மலர்வது சமாதி எனும் கல் அறைதனிலா ? கால மாற்றம் நேருகையில் -  காதலின் தோற்றம் கௌரவ கொலைகளின் வடிவினிலா ? கொலை நடந்தாலும் கொஞ்ச பாசம் பந்தங்கள் சிந்திடும் கண்ணீரிலா ? காதல் என்பதை  ஆயுதமாக்குதல் காமம் அதனை தேடிடவா?  நாசம் செய்யும் நாய் இவனென்று தாயின் வாயாற் கேட்டிடவா ?  சிற்றின்பத்தில்  பேரின்ப பேயினை கண்டவனை கண்டவன் என்றிடும் தாயின் குரல்.  கொச்சை காதல் உள்ள வேளையில் கொண்ட காதலை வென்றிட நினைப்பவரை  மத வெறி கொண்டே  மதியிழந்து  பிள்ளையின் உயிரைப் பருகுதல் வேண்டாம் கொலை புரிந்து. 

கவலை எனும் ' கல்வி '

கம்பியில்லா சிறை , கவலையான கல்வி முறை , காற்றோடு போய் விட்டது காந்தியின் பேச்சு , மதி தேடும் சிந்தையாக காந்தி நோட்டு ஆச்சு . கல்விக் கூடம் அனைத்திலும் எவனோ சொன்ன பாடம் , பேருக்கு தமிழுக்குள் சில பாடலினைப் பாடும் கல்வி முறை தந்த அறிவெல்லாம் முறை தவறி  காசதனைத் தேடும். ஒரு வேளை சோற்றுக்கும் உழ(வ)வினையே நாடும்.

துயரத்தின் மறு பெயர் ' ரோஹிங்யா '

ஈழத்துப் படுகொலைப்போல் அங்கும் ஓர் படுகொலையா அண்டை நாடென்பதாலே பழிச் சொல் கொடுக்கும்  நமக்கும் அண்ணன் ,  தங்கை ,  அம்மை , அப்பன் உறவும் நிலைத்திருக்கும். அப்பேர்பட்ட முகமதியவர்க்கும் எப்பேர்பட்ட கொடுமையடா -  அவர்கள் அழுகுரலாலே அலரும் ஓசை கேட்குதடா -  இடிப்போல்  எங்கள் நெஞ்சில் இனப்படு கொலையது இருக்கும் உறவை அறுத்துப் போகுதடா. ஊரைச் சுற்றும் தலைவர்களெல்லாம்  அவர்கள் காதினில் சங்குகொண்டூதிட வேண்டாமா ? சோற்றுக்குக் கையேந்திடும் நிலையினை - தடுத்திட ஓர் குரல் கொடுத்திட வேண்டாமா ? இந்தியர் என்பதில் எல்லோரும் இணையன்றோ, எம்முயிர் தோழர்களே அவர்களும் நமது உறவன்றோ, மதம் மறந்த மனிதத்தில் எங்கள் குரல் கேட்டேனும் நிலை மாறட்டும், இல்லையெனில் எங்கள் ஒற்றுமையே இதை மாற்றட்டும்.

' தமிழ் '

தானாக பிறந்து , ஓசை உரு அறிந்து , தமிழாக எழுந்து , தரணியில் உயர்ந்து உணர்வுக்குள் புதைந்து , உயிருக்குள் புகுந்து , உயர் புகழ் அடைந்து , உறவாடும் விருந்து , அறிவுக்கு மருந்து, அழகான அமிழ்து , இலக்கணம் வகுத்து , இலக்கியம் துளிர்த்து , மண்ணாக படர்ந்து , மறைகளில் மலர்ந்து , பண்பாடு அடைந்து , பழமையில் பழுத்து , வீரங்கள் நிறைந்து , விண் துளியென வீழ்ந்து , நீராறாய் விரிந்து , காதலில் கரைந்து , கடலாக பெயர்ந்து , மொழிக்கடல் பிறக்க த்  தாய்மை கொண்ட  தமிழ்க் கடலானாய் தமிழே. அடிமைக்கும் மடமைக்கும் ஆயுதமானாய் உலகுக்கும் உயிருக்கும் உணர்வுக்கும் உயர்வுக்கும் உரிமை என்றானாய் தமிழே.