Posts

Showing posts from April, 2025

ஓட்டி

விதவிதமாய் சுழற்றிடுவான்  விழியை உறுதுணை ஆக்கிடுவான் விதியோடு விடையாவான் வினாவாகும் பயணத்தில் கால்களில் வேகமும் கைகளில் திசையையும் கண்களில் கவனத்தையும் விழிப்புடன் கையாள்வான் அதி வேகமும் மித வேகமும் அவனெடுக்கும் முடிவுகளே ஒத்துழைப்பு தருவதெல்லாம்  பயணத்தின் பாதைகளே பந்தயங்கள் சிலநேரம் அபாயங்கள் பல நேரம் எதிர் வரவையும் எந்நேரம் கருத்தாகக் கையாளும் எதிர் வெயிலும், எதிர் ஒளியும் எக்குத்தப்பாய் இயக்க வைக்கும் ஏதோ சில வேளைகளில் உறக்கம் வந்து மயக்கம் தரும் நேரத்தில் ஓய்வெடுத்து  நேரத்தையும் கடைப்பிடித்தால் அச்சுகமான பயணம் அழகானத் தருணம்.

பிள்ளை

தத்தி வந்து  முத்தம் தரும் மொத்த அழகாமே திக்கி வரும்  வார்த்தைகளே திகைக்க வைப்பாமே விழி அசைவே  காவியத்தை விளிக்கும் மொழியாமே அன்னம் தின்னும்  வேளை அதைக்- கன்னம்  தின்பதழகாமே சத்தந் தரும் பொம்மைகளே சந்தோசமாமே நித்தம் பல  சேட்டைச் செய்யும்  பிள்ளையது பெற்றோரின் பெருந்தவமாமே

சன்னலோரம்

பேருந்தின் சன்னல்  ஓரத்தில் பேசிக்கொண்டே வருகிறேன் என்னுடனே நான் வருடங்கள் வேகமாய் ஓடுவது கற்பனை சில நிமிட சிந்தனை மட்டும்  பல வருட காட்சிகளை காட்டுவது எத்தனை ஏக்கம் அத்தனையும்  சுற்றத்தின் தாக்கம் கட்சிகளின் வண்ணக் கொடிகள்  சாலையை அலங்கரிப்பதை சட்டனெ பார்க்கும் போது  நீ சாதித்ததென்ன என்று  பட்டென அறைகிறது  வெற்றியின் விடா முயற்சி. சிலநேரப் பயணம்  இயக்கத்தில் நிறுத்திய  வாகனத்தின் இதயக் குமுறலாகிறது உழைப்பவனை தூற்றும் ஊரார் வாய்கள் சாதனையை விட சிறந்ததாகிறது குறுகிய நேரப் பயணத்தில்  சன்னலில் புகும் காற்றென நினைப்பதற்குள்  தாமதமாகிறதென திட்டித் தீர்த்தத் தாயின் குரலை பதிவிடுகிற தொடுதிரைக் கைப்பேசியின்  செவிக்கான ஒலிபெருக்கி 

தேர்

சக்கர வண்டியில்  அதிக நெடுங்குச்சி கட்டி அலங்காரத் துணிக் கொண்டு  அழகாகச் சுற்றுகையில் மேடையும் வியப்புறு கூடமாகிட கோவிலுடையவன் கூடம் வந்ததும் குதிரை பொம்மைக் கட்டிவிட்டு ஆமை வேகம் கொண்டதனை கருவிகளின் இசையோடு நாதத்தின் ஒலி சேர்த்து நார் திரித்த கயிற்றை நன்றாகக் கட்டி  நாடிவந்தோர் உள்ளங்கை நழுவாமல் பற்றிக் கூடத்துக் குடி கொண்டோன்  நான்கு வீதிச் சுற்றி எல்லோரின் வாசல் வந்து உள்ளோர்க்கு உயர்வு தந்து விதவிதமாய்க் கடை போட்டு பிழைப்புக்கு வழித் தேடி உழைப்பாரோடுச் செல்லும் வழியில்  உன்னையும் திசை திருப்ப  முட்டுக் கட்டை போட்டிடுவார் தன்னுயிர்க் கொண்டு உன்னுயிர்க் காத்திடுவர் அவர்களுக்கும் கருணை செய் ஆகையினால் மீண்டும் நிலை அடையும் வரை வீதிதோரும் சோதி நிலை  

அம்மணம்

தெளிந்த வான் நிலை கூட்டுப் பொருள்களின் கூடு குறிகளின் விடுதலை பிறப்பின் அடையாளம் மானத்தின் பேறுகாலம் உறவுள்ள தனியன் ஆசையற்ற மனம் சிந்திக்கா மூளை துறவின் தூய்மை உடைகளின் உயிர் வெறுமையின் உச்சம் கதவில்லா வீடு இலைகளில்லா மரம் அலையற்ற கடல் உயிருக்குதவா காற்று  கருவின் பிறப்பு இறப்பின் கருச்சுமை

இனி அவள்

காற்றோடு கதை பேசி  ஒளியோடு உறவாடினேன் பாதையின் இருளில்  பயணம் செய்கையில் வாலிப வரவில்  வருகிற காதலில் வந்த தோல்வியைக்  கடந்து வாழ்கையில் கரம் பிடித்தவள் - என்  மனம் பிடித்திட படும் இடர்களை தினம் நினைக்கையில்  பெரும் உளைச்சலை  தரும் என்செயல் தவிர்த் துனக்கென தலை யெடுக்கிறேன் அன்புப் பயிரில் - என் செயலால் விளைந்த இடராய் இருக்கம் களையைப் பறிக்கிறேன் இனி(ய/அ)வளுக்காய்  என்னை அர்ப்பணிக்கிறேன்.

ஆணுக்குள்

அடைப்பட்ட இடத்தில்  அலைப்பாயும் மனதை அடக்காமல் கொஞ்சம்  அழகாகக் கெஞ்சும் திரைகளைத் தொட்டதும் திரிகிற எண்ணங்கள்  திணரும் போது  திருந்தத் தவறும் ஆசை உணர்வால்  ஆளைக் கொள்ளும்  ஆழ்ந்த மாயை  ஆணின் காமம்  உளத்தைத் தந்து  உறவில் நுழைய உயிர் ஆகிறது உடையவன் காதல் தேவை யாதெனத் தேடித் தீர்ப்பவன் தேடப் படுகிற  தேவையர்த் தலைவன்

இருட்டு

கதிரவன் மறைந்ததும் காரிருள் படர்வதும்... கரு உருவாகிட  சினை முட்டைக்குள் சிறந்ததும்... உள்ளொளித் தேடலில்  உடனடியாவதும்... சிக்கல் நேரத்து  சிறந்த முடிவின் முன்  உருவாவதும்... முந்தி வரும் விந்ததுவோ கருப்பையைத் தொடுவதும் கருமுட்டைக்குள் சமாதி செய்து பத்து திங்கள் விடுவதும் உறங்குகிற வேளையில்  விழிக்காமல் தெரிவதும் விழிக்கும் வேளையில்  விடியாமல் இருப்பதும் விழித்தும் விழிக்குப் புலப் படாதவர்க்கும் விதியாய் அமைந்த விடையாம் இருட்டு

அவள்

கூந்தல்  கிழிந்த சவ்தாள்  கிளப்பிய வாசமோ வகுடெடுத்து வாரிய வாலிபத்து மோகமோ உச்சி முகர்ந்து உளமார முத்தம் தந்ததுமென் தலை  தலைகீழாய் சுத்தும் முகம்  ஏந்திய கைகளில்  தாங்கிய பூவோ பூ போல் மலர்ந்த புன்னகை முகமோ அவள் - மனங்கவர் மங்கை என் பாவம் போக்கிட அன்பை பொழியும்  கருநிற கங்கை. கை வளையல் கையில் எழுந்த ஒலியோ இதயத் துடிப்பின்  காதல் மொழியோ கரமுரச ஆசை  காதல் கண்ணை  மறைக்கும் பொழுதும் அவளின்  கரம் பிடிக்க ஆசை கால் அவளின்  கணுக்கால் மூட்டுக்கு  முகமிருந்தால் அதில் அவள்  கொலுசின் முத்து மூக்குத்தியாகிருக்கும் தரைக்கு பாரமாகிற  அவள் பாதம் எனக்கோ என்றும்  தலையனையாய் இடை  குழந்தை விளையாடும்  சருக்கு மரமாயில்லாமல் நான் சருக்கி விழுந்தேன் அது அவளின் வளைந்த இடை சேலை முந்தியும் சுகமாய் சாகிறது  இடைக்கும்  உடை க்கும் இடைப்பட்ட இடத்தில்

கை வீசம்மா கை வீசு

  கையிற் காசில்லாமல் ஆசைக்குப் பஞ்சமுமில்லாமல் மனக்கோட்டை மாளிகையில் எத்தனை மயக்கங்கள்   அழகு சாதனங்கள் ருசியான நொறுக்குகள் சத்தான காய்கனிகள் பொருட்காட்சி உடனான பொழுதுபோக்குகள் ஆடை அணிகலன்கள் ஆடம்பர வசதிகள் அணிதிரண்டு நின்று கண்டதும் கவர்ந்திழுக்க   விதமானப் பூ வகைகள் வீதியோர ஆலயங்கள் சிலுவைக் கோவிலும் மசூதிக் கோவிலும் மனதில் தோற்றுவிக்கும் வழிபாட்டு ஏக்கங்கள் இத்தனை அழகும் அவா உருவாக்கியது அவ்வழியே செல்லுகையில்

தாடி

மெல்லியதாய் அடர்ந்து வண்ணங்கலளால் வசீகரிக்கும் எச்ச கழிவுகள் கூட சிலருக்கு உச்ச அழகைத் தரும்   நீளம் குட்டை தட்டை வடிவுகளில் மற்றோரைக் கவர முகத்தோடு முளைத்து அழுக்கானாலும் ஆணுக்கழகாகிறது   புள்ளிங்கோக்களின் பொழுது போக்கோ ? நிராகரிப்பின் நினைவோ ? வேண்டுதலின் விளைவோ ? தெரியாமல் தவிக்கிறேன்   ஆணின் முகம் பலரின் மனங்கவரும் சிறிய அளவிலான மயிர் நிறை உலகோ  

சூடு

  வீதியைப் பார்க்கிறேன் உதித்து மறையும் சூரியனின் சூட்டை உணர்கிறேன்   உதிக்கிறது சிந்தை இப்படித் தானே இருக்கும் ஓயாமல் உழைக்கும் உள்ளங்களில் உள்ளிருக்கும் ஒவ்வொரு வேளைச் சோற்றுக்கும் துடிக்கும் வயிற்றில் தணியா நெருப்பு   செத்து எரிக்கும் கொள்ளியை விட வாழும் போதே சாகும் வேதனையானதுப் பசி